என்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...? திரைமறைவு பின்னணி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம், கடந்த
2001ல் துவக்கப்பட்டது. ரஷ்யாவுடன் இணைந்து, 13 ஆயிரத்து, 615 கோடி ரூபாய்
செலவில், 2,000 மெகாவாட் தயாரிக்க உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், அடுத்த
மாதம், மின் உற்பத்தி துவக்க நாள் குறித்தாகி விட்டது.
ஆனால், வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைத்த கதையாக, இத்திட்டத்தை
செயல்படுத்தக் கூடாது என்றொரு குரல், பல முனைகளில் இருந்து ஒலிக்கிறது. இதன்
பின்னணி என்ன என்பது பற்றி விசாரணை செய்தபோது கிடைத்த தகவல்கள்:
அமெரிக்காவில், அமைதிக்கான பிஎச்.டி., படிப்பு முடித்தவர் தான், கூடங்குளம்
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், கூட்டப்புளி, இடிந்தகரை,
பெரியவிளை, கூடங்குளம் பாதிரியார்கள், இவர்களுக்கு மேல் உள்ள, தூத்துக்குடி,
மதுரை மறைமாவட்டம் ஆகியவற்றின் தலைமை பாதிரியார்களையும் சேர்த்துக் கொண்டு,
போராட்டத்தை வலுவாக்கி வருகிறார். உள்ளூர் மீனவ சமூகமான, "பெர்னாண்டோ இனம்'
என்ற அடிப்படையிலும், இவர்களை ஒருங்கிணைத்துள்ளார்.
*மக்கள் ஆதரவு:*
தென்மாவட்டங்களுக்கு தலைமை தாங்கும், தலைமை பாதிரியாரின் பூர்வீகம், கூடங்குளம்
என்பதால், அவரும் தன் பங்குக்கு, போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். அணுமின்
நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், அங்கு பணியில் உள்ளவர்கள், அணுமின் நிலையம்
வர வேண்டும் என, விரும்புகின்றனர். ஆனால், சுற்றியுள்ள பகுதிகளின்
போராட்டத்தால், நெருக்கடிக்கு ஆளாகி, அமைதியாக உள்ளனர்.இவர்களது நெருக்கடியால்,
"ஹவுஸ் கீப்பிங்' பணி கான்ட்ராக்ட் எடுத்திருந்த, மகளிர் சுயஉதவிக் குழு
பெண்களும், மனம் மாற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் தேவாலயங்களிலும், மக்களிடம் பேசி,
மன மாற்றம் செய்யப்படுகிறது.
*ஆதரவு சக்திகளின் வேலை:*
கூடங்குளம் மின் நிலையம், இந்திய - ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாவதை, அமெரிக்க
ஆதரவு சக்திகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பின்னணியிலேயே, இந்த
போராட்டம் உருவெடுத்துள்ளதாக, சர்வதேச அணுசக்தி வட்டாரங்கள் கருதுகின்றன.இந்த
பின்னணியை அறிந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
கூட்டமைப்பு தலைவரும், மும்பை கார்டினலுமான, கிரேசியஸ் ஓஸ்வேல்டு மற்றும்
டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் மைக்கேல் கன்செசோ ஆகியோரை ரகசியமாக சந்தித்து,
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்தார்.இதன் எதிரொலியாக,
கூட்டப்புளி, இடிந்தகரை பாதிரியார்களை இடமாற்ற, மும்பை கார்டினல்
உத்தரவிட்டார். ஆனால், கீழே உள்ள பாதிரியார்களால் அந்த உத்தரவு புறக்கணிக்கப்
பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போராட்டத்துக்கான
செலவுகளை, ஒருங்கிணைப்பாளர் செய்து வருகிறார். மறைமுக சக்திகளிடம் இருந்து
அவருக்கு பணம் வருவதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தை, ஊடகங்கள் மூலம், வெளி
உலகிற்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை, அதற்கான செலவை, அப்பகுதியைச் சேர்ந்த,
கனிமவள அதிபர் ஒருவர் செய்து வருகிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால்,
அதைச் சுற்றி 15 கி.மீ., சுற்றளவுக்கு, கனிமங்கள் எடுப்பது பாதிக்கப்படும்
என்பதே, அவரது ஆதரவுக்கு காரணம் என, கூறப்படுகிறது.
தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர், ஓட்டுக்களை
மனதில் வைத்து, ஆரம்பத்தில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால்,
முதல்வர் ஜெயலலிதா ஆதரவு நிலை எடுத்ததும், தொகுதி எம்.எல்.ஏ.,வைத் தவிர,
அனைத்து அரசியல் பிரமுகர்களும், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி விட்டனர். தமிழக
முதல்வரின் ஆதரவு நிலையால், கூடங்குளம் பாதுகாப்பில், மத்திய அரசு சில
சிக்கல்களை சந்தித்து வருகிறது.
*மத்திய அரசுக்கு தெரியும்:*
இருந்தாலும், இந்த உண்மைகள் அனைத்தையும் மத்திய அரசு அறிந்துள்ளதால், அணுமின்
நிலையத்தை துவக்குவதில் உறுதியாக உள்ளது. மாநில போலீஸ் ஒத்துழைக்காவிட்டால்,
மத்திய பாதுகாப்புடன், அணுமின் நிலையத்தை துவக்குவதில், மத்திய அரசு திடமாக
உள்ளது.
No comments:
Post a Comment